அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்


அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2022 12:53 AM GMT (Updated: 9 Aug 2022 12:53 AM GMT)

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.

சென்னை,

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது.

மேலும், சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கி வருகிறது. மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story