வில்லிவாக்கம் அருகே கோர விபத்து; மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி - 2 பேர் படுகாயம்
வில்லிவாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ் (வயது 20). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர், நேற்று முன்தினம் இரவு செல்போன் கடையில் வேலை செய்யும் தனது நண்பரான அம்பத்தூரை சேர்ந்த தருண் (23) என்பவருடன் ராயப்பேட்டையில் நடைபெற்ற தசரா விழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதையடுத்து, விழா முடிந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வில்லிவாக்கம், திருநகர் மற்றும் நியூ ஆவடி ரோடு சந்திப்பு அருகே அவர்கள் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஹரிஸ் மற்றும் எதிரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வில்லிவாக்கம் எம்பா நாயுடு பகுதியை சேர்ந்த மருந்து கடை ஊழியர் ஜெயபிரகாஷ் (23) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹரிஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த தருண் காயங்களுடன் உயிர் தப்பினார். ஜெயபிரகாசுடன் பின்னால் அமர்ந்து வந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் பழனிவேல் (20) படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ஹரிஸ் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரது உடலை பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த தருண், பழனிவேல் ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான 2 பேரும் ஹெல்மெட் அணியவில்லை என்பதும், மோட்டார் சைக்கிள்கள் அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.