கோபி பச்சைமலைசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா


கோபி பச்சைமலைசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 31 March 2023 3:52 AM IST (Updated: 31 March 2023 4:06 AM IST)
t-max-icont-min-icon

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஈரோடு

கடத்தூர்

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுப்பிரமணிய சாமி கோவில்

கோபி பச்சைமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 10 மணிக்கு சேவல்கொடி ஏற்றப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந் தேதி பகல் 11 மணி அளவில் கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முன்னதாக அன்று காலை 9 மணிஅளவில் சண்முகருக்கு சிவப்பு சாத்தி அலங்காரம் செய்யப்படுகிறது.

தேர்த்திருவிழா

5-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு சாமிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜையும், 9 மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரமும் நடக்கிறது.

பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

அன்னதானம்

இதையொட்டி அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. 6-ந் தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சியும், 6.30 மணி அளவில் வள்ளி தெய்வானையுடன் மலர் பல்லக்கில் சண்முகர் நகர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதேபோல் கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், மூலவாய்க்கால் சுப்பிரமணிய சாமி கோவில், கடை வீதி சுப்பிரமணிய சாமி கோவில், கருங்கரடு முருகன் கோவில் ஆகிய கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.


Next Story