'ஷவர்மா' சாப்பிட்ட சிறுமி சாவு:உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு:3 கடைகளுக்கு அபராதம்
தேனி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் 'ஷவர்மா' சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் சிலரும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடந்து தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவைத் தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள் இணைந்து ஓட்டல்கள் மற்றும் சாலையோர உணவகங்களில் ஆய்வு செய்தனர்.
தேனி நகரில் மதுரை சாலை, பாரஸ்ட் ரோடு, பெரியகுளம் சாலை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பாரஸ்ட்ரோட்டில் தரமற்ற கோழி இறைச்சி விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் மொத்தம் 65 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் 6 கடைகளில் செயற்கையான அதிக நிறமூட்டி சமைத்த இறைச்சியும், 3 கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சியும் விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்து சுமார் 20 கிலோ சமைத்த கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்த 3 கடைகளுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.