சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்


சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்
x

கனகம்மாசத்திரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சீதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவர் தனியார் தொழிற்சாலையில் கூலித்தோழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு பொன்மணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருந்தனர். இவரின் மூத்த மகள் பிரதீபா (8) கனகம்மாசத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல தாய் பொன்மணியுடன் பள்ளிக்கு பிரதீபா மற்றும் பக்கத்து வீட்டு சிறுமி ஆகியோரை அழைத்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் கனகம்மாசத்திரம் வழியாக செல்லும் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அந்த நேரத்தில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் சிறுமி பிரதீபா மீது மோதியது. இந்த கோர விபத்தில் சிறுமி சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தாய் கண் முன்னே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மகள் இறந்ததை கண்டு தாய் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண் களங்க செய்தது.

தகவல் அறிந்து விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த குன்னவளம் கிராமத்தைச் சேர்ந்த மதன் (19) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சிறுமியின் உயிரிழப்பிற்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியலை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளி சென்ற மாணவி மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story