குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது


குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது
x

மன்னார்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

மலைபோல் குவிந்த குப்பைகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி 11 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட நகராகும். இங்கு உள்ள 33 வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் குப்பைகளை பெற்று குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மன்னார்குடி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் டிப்போ சாலை பகுதியில் மலை போல் குவிந்துள்ளது.

இந்த குப்பைகளை அகற்றவும், குப்பைகளை மறுசுழற்சி முறையில் உரமாக மாற்ற நினைத்த மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மன்னார்குடி மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகள் ஆர்.பி.சிவம் நகர், டிப்போ சாலை, வடசேரி சாலையில் உள்ள குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரு வகையாக பிரிக்கப்படுகிறது.

உரமாக தயாராகிறது

இந்த குப்பைகள் அங்குள்ள 7 தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு அதில் ஈயம் சொலியுஷன் கரைஸ் தெளிக்கப்பட்டு மூன்று வாரங்கள் வரை வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த குப்பைகள் அடுத்தடுத்த தொட்டிகளுக்கு மாற்றப்படுகிறது.45 நாட்களுக்கு பின்னர் இந்த குப்பைகள் மக்கி உரமாக தயாராகிறது. இந்த உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மன்னார்குடி நகரமன்ற தலைவர் மன்னை த.சோழராஜன் கூறுகையில் மன்னார்குடி நகரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட சுமார் 60 ஆயிரம் டன் குப்பைகள் அப்புறப்படுத்த சுமார் ரூ.2½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் இதுவரை 10 ஆயிரம் டன் குப்பைகள் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

சிமெண்டு தொழிற்சாலை

இந்த குப்பைகள் பயோ மைனிங் முறையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகள் சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மலைபோல் குவிக்கப்பட்டுள்ள இந்த குப்பைகள் இன்னும் ஓராண்டு காலத்தில் முழுமையாக அகற்றப்படும் என்றார்.

மன்னார்குடி நகரில் பல பகுதிகளிலும் ஒட்டு மொத்த தூய்மை பணி மூலமும், வீடுகள் தோறும் பொதுமக்களிடமிருந்து குப்பைகள் பெறப்பட்டு தெருக்கள் தூய்மை செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

அத்துமீறி குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்பவர்கள் கண்டறியப்பட்டு எச்சரிப்பதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு மன்னார்குடி நகரின் தூய்மை தொடர்ந்து பாதுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நெடு நாட்களாக மன்னார்குடி பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட குப்பைகளால் அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த குப்பை கழிவுகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு விளைநிலங்களை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.


Next Story