சென்னை மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணிக்கான கிரேனை திருடிய கும்பல் கைது


சென்னை மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணிக்கான கிரேனை திருடிய கும்பல் கைது
x

மேடவாக்கத்தில் மெட்ேரா ரெயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேனை திருடி ஆந்திராவில் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

கிரேன் திருட்டு

சென்னையை அடுத்த மேடவாக்கம் மெயின் சாலை, வேளச்சேரி மெயின் சாலை ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒப்பந்த முறையில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று செய்து வருகிறது. மெட்ரோ ெரயில் தூண்களை அமைப்பதற்காக பெரிய கிரேன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த கிரேன்களை வேலை முடிந்தவுடன் அதே பகுதியில் சாலை ஓரம் நிறுத்தி வைப்பது வழக்கம். கடந்த 10-ந் தேதி மாலை பணி முடிந்தவுடன் வழக்கம்போல் கிரேனை மேடவாக்கம் கூட்ரோடு அருகே சாலை ஓரம் நிறுத்தி வைத்தனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி வைத்திருந்த கிரேன் வாகனத்தை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

ஆந்திராவில் மீட்பு

இது தொடர்பாக ஒப்பந்ததாரரான பொன்னேரியை சேர்ந்த கிருஷ்ணகுமார் பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர். அதில் திருடப்பட்ட கிரேனை மேடவாக்கத்தில் இருந்து சேலையூர், தாம்பரம் வழியாக வெளிவட்ட சாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து ஆந்திர மாநிலம் ஏர்குண்டலா பகுதிக்கு கொண்டு சென்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் ஆந்திர மாநிலம் ஏர்குண்டலா சென்று திருடப்பட்ட கிரேனை மீட்டனர். விசாரணையில் எண்ணூர் நேரு நகரை சேர்ந்த கிரேன் டிரைவர் முரளி (வயது 43), அவருடைய நண்பர்களான பட்டாபிராமை சேர்ந்த கார்த்திக் (43), எர்ணாவூரை சேர்ந்த திருநாவுக்கரசு (48) ஆகிய 3 பேரும் திருடியது தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு கடன்கள் இருந்ததால் அவற்றை அடைத்து விட்டு உல்லாசமாக இருக்க திட்டமிட்டு, மேடவாக்கத்தில் நிறுத்தி இருந்த கிரேனை திருடிய முரளி நண்பர்கள் மூலம் ஆந்திராவுக்கு ஓட்டி சென்று, அங்கு கிரேன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் நரசிம்ம ரெட்டி (42) என்பவரிடம் அவரது டிரைவர் அணில்குமார் ரெட்டி (25) மூலம் பேரம் பேசி உள்ளனர்.

5 பேர் கைது

பின்னர் கிரேனை ரூ.15 லட்சத்துக்கு பேரம் பேசி, முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை வாங்கி உள்ளனர். மீதமுள்ள தொகையை ஒரு மாதத்தில் தரும்படி கூறி உள்ளனர். இதையடுத்து கிரேன் வாகன தமிழக பதிவு எண்ணில் இருந்து ஆந்திர எண்ணுக்கு மாற்றி பதுக்கி வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பள்ளிக்கரணை போலீசார் முரளி உள்பட 5 பேரையும் கைது செய்தனர். சென்னையில் திருடிய கிரேனை 300 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்று ஆந்திராவில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கிரேன் சென்ற வழியை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். ரூ.5 லட்சத்தில் கடன்கள் அடைத்ததுபோக மீதம் இருந்த ரூ.2½ லட்சத்தை போலீசார் மீட்டனர்.


Next Story