காந்தி நினைவு தினம்: திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு


காந்தி நினைவு தினம்: திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத நல்லிணக்க உறுதி மொழியை வாசித்தார்.

சென்னை,

காந்தியடிகளின் 76-வது நினைவு நாளானது தேச அளவில் இன்று அனுசரிக்கப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி "தியாகிகள் தினம்" ஆக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட அண்ணலின் நினைவாக தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய நாளில் தி.மு.க சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மத நல்லிணக்க உறுதி மொழி எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில், நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார்.

அதன்படி, திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தி.மு.க. தொண்டர்கள் முன்னிலையில் உறுதி மொழி வாசிக்கப்பட்டது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.


Next Story