சென்னையில் பிரமிக்க வைத்த 'சந்திரயான்-3' விநாயகர்


சென்னையில் பிரமிக்க வைத்த சந்திரயான்-3 விநாயகர்
x

சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் விதம் விதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில் புதுவரவாக ‘சந்திரயான்-3’ விநாயகர் சிலைகள் பொதுமக்களை பிரமிக்க வைத்தன.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்து பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விநாயகர், சிவன், அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1,500 இடங்களுக்கு மேல் பிரமாண்ட ராட்சத விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு சம்பவங்களை முன்னிறுத்தி விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

'சந்திரயான்-3' விநாயகர்

அதன்படி, சென்னை புறநகர் பகுதியான கீழ்கட்டளை மற்றும் கொளத்தூர் விநாயகபுரம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 'சந்திரயான்-3' நிகழ்வை நினைவூட்டும் வகையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன.

சென்னையை அடுத்த கீழ்கட்டளை பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான்-3' விநாயகர் சிலையின் அருகில் ராக்கெட் ஏவுதளம் போல் வடிவமைக்கப்பட்டு அதில் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் ராக்கெட் புகையை கக்கியபடி மேலே செல்வது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகர், லேப்டாப் மூலம் 'சந்திரயான்-3' ராக்கெட்டை விண்ணில் ஏவுவது போன்று அமைந்துள்ளது.

விநாயகர் சிலை அருகில் உள்ள டி.வி.யில் கவுண்ட்டவுன் ஒலித்ததும், விநாயகர் இயக்கும் இந்த ராக்கெட் புகையை கக்கியபடி விண்ணை நோக்கி சுமார் 40 அடி தூரம் மேலே எழும்பி, மீண்டும் பத்திரமாக தரையில் இறங்குவது போன்று மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

அதேபோன்று, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அண்டவெளி போல் கூடாரம் அமைக்கப்பட்டு அதில் சந்திரனின் மேல் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது போன்று பிளக்ஸ் பேனரால் வடிவமைக்கப்பட்டு, ராட்சத விநாயகரின் முன்பு பெரிய அளவிலான பிறை வடிவ சந்திரனை அமைத்து இருந்தனர். இதனையும் பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்.

'லியோ' விஜய் விநாயகர்

கொளத்தூர் விநாயகபுரத்தில் வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான்-3' விநாயகர் சிலையானது, தமிழ்நாடு அரசு சின்னம், தேசிய கொடி பொறிக்கப்பட்டிருந்த ராக்கெட் வடிவில் கூடாரம் அமைத்து அதற்கு உள்ளே பிரமாண்டமாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லியோ' படத்தின் கதாபாத்திர வடிவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

இது தவிர, சென்னை வளசரவாக்கத்தில் செங்கோல் விநாயகர், கோடம்பாக்கத்தில் கருப்பு மற்றும் வெள்ளை எள்ளு விநாயகர், திருவல்லிக்கேணியில் உலகக் கோப்பை கிரிக்கெட் விநாயகர், தாதா விநாயகர், வீர விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. மணலி புதுநகரில் சுமார் 5 ஆயிரம் சோளங்களை கொண்டு 18 அடி உயரமும், 10 அகலமும் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 42 அடி உயரத்தில் முழுவதும் வெட்டிவேரால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

சந்தனம், பிஸ்கட் விநாயகர்

கொளத்தூர், ராம் நகரில் 11 அடி உயரத்தில் முழுவதும் சந்தனத்தால் ஆன 400 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையும், மணலி சின்னச்சேக்காடு, காந்திநகர் பகுதியில் 5 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட பிள்ளையார் சிலையில், பூசணிக்காய், வாழைப்பூ, கேரட், அன்னாசிபழத்தால் தேசியக்கொடி போல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

சென்னை பெரவள்ளூர் பகுதியில் முழுவதும் குபேரர் தகடால் ஆன 21 அடி விநாயகரும், திரு.வி.க. நகர் பகுதியில் தேங்காயால் வடிவமைக்கப்பட்ட விநாயகரும், கொளத்தூரில் 20 ஆயிரம் குபேர விளக்கு, 8 ஆயிரம் அரச இலைகளை கொண்டு 40 அடி உயரத்திலான பிரமாண்ட குபேரர் விநாயகரும், சென்னை சி.ஐ.டி. நகரில் 208 கிலோ அளவிலான மைசூர்பாகு கொண்டு 10 அடி உயர விநாயகர் சிலையும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது.

சிக்ஸ் பேக் விநாயகர்

இதே போன்று, சிக்ஸ் பேக் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், சைக்கிள் ஓட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த விநாயகர் சிலைகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்ற இடங்களில் பக்தர்களுக்கு சுண்டல், பாயாசம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டதுடன் ஏராளமான இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை விநாயகரை பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிச்சென்று வழிபட்டனர்.


Next Story