17-ம் தேதி முதல் அ.தி.மு.க. தொடக்கவிழா பொதுக்கூட்டங்கள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. 17-ம் தேதி 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
சென்னை,
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
கழக நிறுவனத் தலைவர் `பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' 17.10.2024 - வியாழக்கிழமையன்று 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.10.2024 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டங்களில், கழகத்தின் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதன் விபரங்களையும்; கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் குறித்த விபரங்களையும்; அதே போல், தங்கள் மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் விபரங்களையும் தலைமைக் கழகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .