ஆந்திர வாலிபர் கொலையில் நண்பர் கைது: காதலி குறித்து தவறாக பேசியதால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம்


ஆந்திர வாலிபர் கொலையில் நண்பர் கைது: காதலி குறித்து தவறாக பேசியதால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம்
x

ஆந்திர வாலிபர் கொலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். காதலி குறித்து தவறாக பேசியதால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 20). இவர் திருவள்ளூர் மாவட்டம் காசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா மையத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நடுக்குத்தகை கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ் (20) என்கிற பயாஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பராக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அர்ஜூன் பிணமாக மீட்கப்பட்டார். திருவள்ளூர் ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று ரெயிலில் அடிபட்டு இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் அங்கு விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின் திருவள்ளூர் மணவாளர் நகர் அருகே இடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய மகன் திருவள்ளூர் அருகே பணி செய்யும் இடத்திற்கு சென்றவர் காணவில்லை என்று அர்ஜூனின் தாய் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆந்திரா போலீசார் அர்ஜுனின் செல்போன் என்னை கொண்டு ஆய்வு செய்தனர்.

இதில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் தினேசிடம் அவர் கடைசியாக பேசியதை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தினேஷ் திடுக்கிடும் தகவலை தெரிவித்து போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

தன்னுடைய காதலியை தவறாக பேசியதால் அர்ஜூன் மீது கோபத்தில் இருந்தேன். அவரை மது குடிக்க அழைத்து சென்று அடித்துக்கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசினேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டு அனாதை பிணம் என்று அடக்கம் செய்யப்பட்டது அர்ஜுன் என்பது தெரியவந்தது.

ஏற்கனவே தினேஷ் மீது திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அர்ஜுன் தற்கொலை வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி தினேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story