தொடர் மின்வெட்டால் அவதி; நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த உதண்டி, பனையூர், அக்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவை கடந்தும் வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகள், இதய நோயாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த நிலை சீர்செய்யப்படாமல் தொடர்ந்து மின்வெட்டு நீடித்தால் அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக காவல்துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சென்னை-பாண்டிச்சேரி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டு சிறிது நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது.