வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி 40 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி


தஞ்சையில் போலியாக நிறுவனம் நடத்தி வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி 40 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

ரூ.9 லட்சம் மோசடி

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள களஞ்சியம் நகர் 2-வது தெருவில் ஒரு போலி டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தின் பெயரில் புருனேவுக்கு ஆட்கள் தேவை என கூறி விளம்பரமும் செய்யப்பட்டது. இது தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் இது தொடர்பாக விளம்பர சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அதன் மூலம் புருனே நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்த டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 40 பேரிடம் இருந்து ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் மருத்துவ சான்றை பெற்றுக்கொண்ட மேற்கண்ட நிறுவனத்தை நடத்தி வந்த 2 பேர் அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டு அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம் புகார் செய்தனர். புகாரை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் 2 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த ராமன் மகன் ராம்குமார், திருச்செந்தூரை சேர்ந்த முருகேசன் மகன் கணேசமூர்த்தி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து கைதான 2 பேரையம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும், இதே போன்று வெளிநாட்களுக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் பலரிடம் மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story