சாக்லெட் விற்பனை டீலர்ஷிப் தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.7½ லட்சம் மோசடி


சாக்லெட் விற்பனை டீலர்ஷிப் தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.7½ லட்சம் மோசடி
x

விழுப்புரத்தில் சாக்லெட் விற்பனை டீலர்ஷிப் தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஏனாதிமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கராசு (வயது 33), வியாபாரி. இவர் கேட்பரி நிறுவனத்தின் சாக்லெட் மற்றும் பிஸ்கெட் வாங்கி விற்பனை செய்யும் டீலர்ஷிப் பெறுவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி இணையதளத்தில் தேடியுள்ளார்.

அப்போது கிடைக்கப்பெற்ற கேட்பரி பிசினஸ் என்ற இணையதளம் வழியாக சென்று டீலர்ஷிப் பெறுவதற்காக தனது விவரங்களை பதிவு செய்தார். பின்னர் மறுநாள் (26-ந் தேதி) தங்கராசுவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் உங்களுக்கு கேட்பரி நிறுவன டீலர்ஷிப் தருவதாகவும், அதற்கு ஒப்பந்தம் மற்றும் பதிவு, என்.ஓ.சி., பாதுகாப்பு வைப்புத்தொகை உள்ளிட்டவை செலுத்த வேண்டும் என கூறினார்.

ரூ.7½ லட்சம் மோசடி

இதை நம்பிய தங்கராசு, கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் வழியாக 4 தவணைகளில் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 760-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் தங்கராசுக்கு டீலர்ஷிப் வழங்காமல் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என அந்த நபர் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து தங்கராசு, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story