மெரினா கடற்கரையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி
சென்னை மெரினாவில் விடுமுறையை கொண்டாட வந்தபோது அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியானார்.
4 வயது சிறுவன்
சென்னை பள்ளிக்கரணை, ராஜேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 32). இவர் தஞ்சாவூரில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், விடுமுறை தினமான நேற்று முன்தினம் (26-ந் தேதி) மாலை 3 மணி அளவில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். அப்போது, மாலை 4 மணி அளவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் குடும்பத்தினரோடு குளித்துள்ளனர்.
மூச்சு திணறி பலி
நீச்சல் குளத்தில் ஒரு பகுதியில் ஹரிஹரன் அவருடைய உறவினர்கள் குளித்து கொண்டிருந்தனர். மற்றொரு பகுதியில் ஹரிஹரனின் மகன் அனிருத் கிருஷ்ணன் (4) குளித்து கொண்டிருந்தான். அனிருத் உடன் அவர் பாட்டி இருந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் அனைவரும் குளித்துவிட்டு வந்த நிலையில் அனிருத் கிருஷ்ணன் மட்டும் காணாமல் போனதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், ஹரிஹரன் மற்றும் குடும்பத்தினர் நீச்சல் குளத்தில் இறங்கி அனிருத்தை தேடியுள்ளனர். அப்போது, நீச்சல் குளத்தின் அடியில் அனிருத் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, உடனடியாக அனிருத்தை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர். பின்னர், அவனுக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. மயங்கிய நிலையில் அவனை அருகில் உள்ள கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனிருத்தை பரிசோதித்த டாக்டர்கள் மூச்சு திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிகமாக மூடப்பட்டது
தகவலின் பேரில் வந்த அண்ணாசதுக்கம் போலீசார் அனிருத் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணா நீச்சல் குளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கவனக்குறைவால் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் எனவும், எந்த பாதுகாப்பு உபகரணமும் கொடுக்காமல் ஊழியர்கள் எப்படி சிறுவனை அனுமதித்தனர் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அண்ணா நீச்சல் குளம் பராமரிப்பு பணியின் காரணமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்காலிகமாக மூடி வைத்துள்ளது.