தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை எதிா்கொண்டவா் எம்.எம்.ராஜேந்திரன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-
"தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரும், ஒடிசா மாநில முன்னாள் கவர்னருமான எம்.எம். ராஜேந்திரன் மறைவெய்தினாா் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
1957 ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜேந்திரன் உதவி ஆட்சியா், துணை ஆட்சியா் போன்ற பொறுப்புகளை வகித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக உயா்ந்தவா். 1964-ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை எதிா்கொண்டவா். அந்த அனுபவத்தைக் கொண்டு பின்னாளில் 1999-ல் ஒடிசா மாநில கவர்னராக இருந்தபோது அங்கு நிகழ்ந்த புயலை எதிா்கொள்வதிலும் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி முக்கியப் பங்களிப்பை ஆற்றியுள்ளாா்.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலரான ராஜேந்திரன், 1989-ல் கருணாநிதி முதல்-அமைச்சரான பின்னும் அந்தப் பதவியில் தொடா்ந்து நீடித்துப் பணியாற்றினாா். அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினா்களுக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.