3-வது முறையாக கூவம் ஆற்றில் விழுந்த வாலிபர்: போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்


3-வது முறையாக கூவம் ஆற்றில் விழுந்த வாலிபர்: போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்
x

3-வது முறையாக கூவம் ஆற்றில் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.

சென்னை

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் விழுந்துவிட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் கூவம் ஆற்றில் ரப்பர் படகை இறக்கி வாலிபரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது, அவர் தீயணைப்புத்துறையினரின் படகு நெருங்கி வரும்போது எல்லாம் நீச்சல் அடித்து ஒவ்வொரு கரையாக மாறினார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் கூடுதல் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் கூவம் ஆற்றில் இறங்கி வாலிபரை பிடிக்க முயன்றனர்.

ஆனால், வாலிபரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர கடுமையான போராட்டத்துக்கு பின்னர் அவரை கயிறு மூலம் மீட்டனர். இதையடுத்து, கரைப்பகுதிக்கு வாலிபரை கொண்டு வந்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவரின் பெயர் வேலு (வயது 35) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் அதே பகுதியில் உள்ள பந்தல் போடும் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வேலுவை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கு முன்பு வேலு இதே கூவம் ஆற்றில் 2 முறை விழுந்ததும் அவரை காப்பாற்றிய போலீஸ் எச்சரித்து அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story