2-வது நாளாக தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கப்பியறை பேரூராட்சியில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சப்-கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
கருங்கல்:
கப்பியறை பேரூராட்சியில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சப்-கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
2-வது நாளாக போராட்டம்
கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கப்பியறை பேரூராட்சி கவுன்சிலர்கள் தலைவர் அனிஷா கிளாடிஸ் தலைமையில் நேற்று முன்தினம் காலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு விடிய, விடிய நடந்த போராட்டம் 2-வது நாளாக நேற்று காலையிலும் நீடித்தது. இதுபற்றி தகவல் அறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், கனிமவளத்துறை புவியியலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தை தோல்வி
பின்னர் மாலை 4 மணிக்கு சப்-கலெக்டர் கவுசிக் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதிலும் தீர்வு காணப்படவில்லை. அதிகாரிகள் 2 முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்தது.
இதுகுறித்து பேரூராட்சி தலைவி அனிஷா கிளாடிஸ் கூறுகையில், கல்குவாரியை மூடும் வரை எங்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்றார். 2-வது நாள் போராட்டத்தின் போது கண்ணில் கருப்புத்துணியை கட்டியபடி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நீடித்து வருவதால் அங்கு இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.