மது இல்லாத தமிழகம் உருவாக 44 ஆண்டுகளாக போராடுகிறேன் - டாக்டர் ராமதாஸ்


மது இல்லாத தமிழகம் உருவாக 44 ஆண்டுகளாக போராடுகிறேன் - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 27 March 2024 1:00 AM IST (Updated: 27 March 2024 2:03 PM IST)
t-max-icont-min-icon

மது இல்லாத தமிழகம் உருவாக மாவட்டங்களில் மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தி இருக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து நேற்று இரவு மறைமலைநகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி இந்திய அளவில் பேசக்கூடிய தலைவர் அல்ல, அவர் உலக அளவில் பேசக்கூடிய சிறந்த தலைவர், உலக அளவில் ஏதாவது பிரச்சினை என்றால் மோடி என்ன கருத்து சொல்கிறார் என்று உலகத் தலைவர்கள் உற்று நோக்குகின்றனர்.

400 நாடாளுமன்ற உறுப்பினருக்கு மேல் வெற்றி பெற்று இந்திய பிரதமராக 3-வது முறையாக மோடியை தேர்ந்தெடுக்க போகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் வீட்டில் படுத்து தூங்குபவர்கள் அல்ல. மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவார்கள். கடந்த முறை வெற்றி பெற்ற 38 எம்.பி.க்கள் எதுவும் செய்யவில்லை, விவசாயம் செழிக்க வேண்டும் ஜனாதிபதிக்கு கிடைக்கிற மருத்துவ வசதிகள் ஏழைக்கும் கிடைக்க வேண்டும்.

மது இல்லாத தமிழகம் வேண்டும் என்பதற்காக கடந்த 44 ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதற்காக அப்போது இருந்த 32 மாவட்டங்களிலும் மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தி இருக்கிறேன். தமிழ்நாட்டில் 370 சாதிகள் உள்ளன. எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும். தரமான கல்வி, கட்டாய கல்வி, சுகமான கல்வி, சுமை இல்லாத கல்வி விளையாட்டுடன் கூடிய கல்வி கொடுக்க வேண்டும், வேலை வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தார். இந்தியாவில் போலியோவை ஒழித்து அதற்காக விருதுகளை பெற்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story