கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சத்தரை தரைப்பாலம் சேதம் - வாகனங்கள் செல்ல போலீசார் தடை


கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சத்தரை தரைப்பாலம் சேதம் - வாகனங்கள் செல்ல போலீசார் தடை
x

கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சத்தரை தரைப்பாலம் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

திருவள்ளூர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 3 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள், ஆறுகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தில் அதிக தண்ணீர் செல்வதால் பாலத்தின் ஒரு புரத்தில் சேதம் அடைந்து உள்ளது.

மேலும் கூவம் ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பாலம் உடையும் அபாய நிலையை கருத்தில் கொண்டு மப்பேடு போலீசார் சத்தரை தரைப்பாலத்தை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடக்காத அளவிற்கு இரும்பினாலான தடுப்புகளை கொண்டு சாலையை முழுவதுமாக தடை செய்தனர்.

இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கொண்டஞ்சேரி, மப்பேடு, கூவம், குமாரச்சேரி, இருளஞ்சேரி, பூந்தமல்லி, தண்டலம் போன்ற பகுதிகளுக்கு செல்ல சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று அவதியுற்றவாறு செல்கின்றனர்.

மேலும் சேதமடைந்த சத்தரை தரைப்பாலத்தை நேற்று திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story