குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் சீசன்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் தாமதமாக தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் அருவிகளில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குறைவாக தண்ணீர் விழுந்த போதிலும் அதில் ஏராளமானவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

நேற்று காலையில் இருந்து குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குளிர்ந்த காற்று வீசியது. வெயிலின் தாக்கம் இல்லை. இடையிடையே சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சுமார் 6.30 மணி அளவில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அருவியை பார்த்து சென்றனர்.

மெயின் அருவியிலும் தடை

இதேபோல் மெயின் அருவியில் மாலையில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


Next Story