மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு


மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

திருநெல்வேலி

அம்பை:

தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நெல்லையில் அவ்வப்போது லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது. தென்காசி, கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அணைப்பகுதிகளில் மழை

இதேபோல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற தேயிலை தோட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

வெள்ளப்பெருக்கு

நேற்று முன்தினம் இரவும் அங்கு பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலை திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.



Next Story