மீனவர்கள் போராட்டம்: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணியை தொடங்கிய அதிகாரிகள்..!


மீனவர்கள் போராட்டம்: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணியை தொடங்கிய அதிகாரிகள்..!
x

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் உயிரிழந்தது தொடர்பாக மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்று மீன்பிடி துறைமுக பணிகள் தொடங்கி உள்ளது.

கிள்ளியூர்,

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சரியான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடிக்கப்பட்டதால் துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி கடல்சீற்றத்தில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அரங்கேறி வந்தன.

இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீனவ மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து மறு சீரமைப்புக்காக 240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இருந்தும் இதுவரை எந்த பணிகளும் துவங்காமல் துறைமுக முகத்துவாரம் அப்படியே கிடக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை நாட்டு படகு ஒன்று துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன்(48) என்ற மீனவர் பலியானார். இதை தெடர்ந்து பூத்துறை மீனவ கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

மேலும் போராட்டம் முடிவுக்கு வரும் வரையிலும் துறைமுகத்தில் மீன் இறக்குதல் உள்ளிட்ட எந்த பணியும் செய்வதில்லை எனவும், இனயம், தூத்துர் மண்டலத்தை சேர்ந்த 15 மீனவ கிராமங்களில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர் பள்ளி கல்லூரிகளை புறக்கணிப்பது எனவும், பெரு நிறுவனங்கள் உட்பட கடைகள் அனைத்தும் அடைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுடன் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து இன்று உடனடியாக துறைமுக பணி ஆரம்பிக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குனர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறை முகத்தில் பணிகள் துவங்க அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர். காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற துவங்கினர் . தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 தினம் பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினார்கள்.


Next Story