குட்டையில் தார்ப்பாய் விரித்து மீன் வளர்ப்பு
குட்டையில் தார்ப்பாய் விரித்து விருதுநகர் விவசாயி மீன் வளர்க்கிறார்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் வல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன்.
விவசாயியான இவர் தமிழக அரசின் திட்டத்தின் மூலம் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்த்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அதிகாரிகள் ஆலோசனை
நான் வல்லம்பட்டி பகுதியில் 2010-ம் ஆண்டு அரசு அனுமதி பெற்று 5 ஏக்கர் தோட்டத்தில் கல்குவாரி அமைத்து இருந்தேன். நாளடைவில் இந்த பகுதியில் எண்ணற்ற பட்டாசு ஆலைகள் வந்தன. இதனால் இந்த குவாரியை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. எனது கல்குவாரிக்கு இருபுறமும் மழைநீர் செல்லும் வகையில் ஓடை உள்ளது.
மீன்வளத்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்தபோது இதனை பார்த்தனர். அப்ேபாது மீ்ன் வளர்க்கும் வகையில் ஏற்ற சூழல் உங்களது தோட்டத்தில் இருப்பதால் நீங்கள் தமிழக அரசு மீன்வளத்துறை வழங்கும் மானியத்தை பயன்படுத்தி பண்ணை குட்டை அமைக்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
தார்ப்பாய் விரித்தேன்
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் பண்ணை குட்டை அமைத்தேன். 100 அடி நீளம், 100 அடி அகலம், 5 அடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைத்தேன். பின்னர் தார்ப்பாய் விரித்தேன்.
கல்குவாரியில் இருந்த மழைநீரை, குட்டையில் விரித்த தார்ப்பாயில் பாய்ச்சினேன். அதன்பிறகு தமிழக அரசு வழங்கிய 1,500 ஜிலேபி ரக மீன்களை விட்டேன்.
இதற்கு மொத்தம் ரூ.1½ லட்சம் வரை செலவு ஆகும். இதில் ரூ.75 ஆயிரத்தை தமிழக அரசு மானியமாக வழங்கியது. இந்த மீன்களை 150 நாட்களில் வளர்த்து விற்று விட வேண்டும். நான் இதுவரை 550 கிலோ மீன்கள் விற்றுவிட்டேன். கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்கிறேன்.
புதிய தண்ணீர்
பெரும்பாலும் எங்கள் பகுதி மக்களே இந்த மீனை விரும்பி வாங்கி செல்கின்றனர். 60 நாட்களுக்கு ஒரு முறை குட்டையில் 3 அடி உயர தண்ணீரை வெளியேற்றி விட்டு மீண்டும் புதிய தண்ணீரை பாய்ச்ச வேண்டும். அப்போது தான் மீன்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும். இவ்வாறு வெளியேற்றப்படும் மீன்கழிவுடன் கூடிய தண்ணீரை வீணாக்காமல் தோட்டத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு பாய்ச்சி வருகிறேன்.
மீன்வளத்துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு முறை பண்ணைகுட்டைக்கு நேரில் வந்து தண்ணீரின் தரம், மீன்கள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்வர். அத்துடன் தகுந்த ஆலோசனையும் எனக்கு வழங்குவர்.
சான்றிதழ்-விருது
என்னுடைய இந்த முயற்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் ரூ 3,000 ஊக்கத்தொகை, சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் இதேபோன்று நீரை தேக்கி பண்ணைகுட்டை அமைத்து மீன்கள் வளர்த்து பணம் சம்பாதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். இவரது முயற்சியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.