ஆண்டின் முதல் கூட்டம் நாய்த்தொல்லையால் மக்கள் அவதி - தாம்பரம் மாநகராட்சியில் புகார்


ஆண்டின் முதல் கூட்டம் நாய்த்தொல்லையால் மக்கள் அவதி - தாம்பரம் மாநகராட்சியில் புகார்
x

தாம்பரம் மாநகராட்சியில் ஆண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில்,நாய்த்தொல்லையால் பொதுமக்கள் அவதியடைவதால் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தினார்.

சென்னை

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை மேயர் கோ.காமராஜ் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேயர் பேசுகையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையராக டாக்டர்.எம்.இளங்கோவன் பொறுப்பேற்று மாநகராட்சி தேர்தலை நல்லபடியாக நடத்தி முடித்து கிட்டத்தட்ட 14 மாதங்களாக ஆணையராக சிறப்பான முறையில் பணியாற்றி நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்து உள்ளார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் (அ.தி.மு.க.) பேசுகையில், மாமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறாமல் உள்ளது அதேபோல அனைத்து வார்டுகளிலும் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. பொது கழிவறைகளும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மேயர், தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்திலேயே மாமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கையாக வைத்துள்ளோம், அதிவிரைவில் அரசிடம் இருந்து நல்ல பதில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் யாக்கூப் பேசுகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதேபோல ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் செந்தில்குமார் பேசுகையில், எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இது தொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளிவந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களினால் தொல்லைகள் இல்லாமல் இருக்க நிரந்தர தீர்வு வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த துணை மேயர் கோ.காமராஜ், இதுகுறித்து ப்ளூ கிராஸில் பேசி நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தெரு நாய்களை எடுத்துச் சென்று பராமரிக்கும் தன்னார்வலர்கள் இடமும் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ம.தி.மு.க. உறுப்பினர் புஸிராபானு பேசுகையில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் குறைகளை கேட்க அலுவலகம் உள்ளதை போல், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story