தனியார் கண் ஆஸ்பத்திரியில் 'லிப்ட்'க்குள் சிக்கிய 8 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
தனியார் கண் ஆஸ்பத்திரியில் 'லிப்ட்'க்குள் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஆவடி காமராஜ் நகர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கண் ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. நேற்று காலை இந்த ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை பெறுவதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் வந்தனர்.
சிகிச்சை முடிந்து மதியம் 2 மணிக்கு முதல் தளத்தில் இருந்து தரை தளத்துக்கு 'லிப்டில்' ஏறி கீழே இறங்க முயன்றனர். அப்போது திடீரென 'லிப்ட்' பழுதாகி பாதியில் நின்றுவிட்டது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் 'லிப்ட்டு'க்குள் சிக்கிக்கொண்டனர். சிறிய அளவிலான அந்த 'லிப்டில்' குறைந்தது 5 பேர்தான் செல்லமுடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது தெரியாமல் கூடுதலாக 3 பேர் ஏறி 8 பேர் பயணித்ததால் 'லிப்ட்' இடையில் பழுதாகி நின்று விட்டதாக தெரிகிறது.
'லிப்டில்' மாட்டிக்கொண்ட 8 பேரும் பயத்தில் கூச்சலிட்டனர். உடனடியாக ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி 'லிப்டில்' சிக்கி தவித்த 8 பேரையும் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.