ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது


ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
x

பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை

காட்டாங்கொளத்தூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 36). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலருக்கு விண்ணப்பித்திருந்தார்.

இது தொடர்பாக சமூக நல அலுவலர் கஸ்தூரியை நேரில் சந்தித்து விண்ணப்ப நிலை குறித்து கேட்டார். அப்போது கஸ்தூரி ரூ.2 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என்று சுப்பிரமணியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர், ரூ.1,800 தருகிறேன் என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுபற்றி செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவிய 1,800 ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை நேற்று மாலை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலர் கஸ்தூரியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் சமூக நலத்துறை அறையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்தனர். சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.


Next Story