'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை ஓட்டத்தால் அச்சம்


செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டத்தால் அச்சம்
x

போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள், நேற்று அரசு சார்பில் நடத்தப்பட்ட செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டத்தால் அச்சம் அடைந்தனர்.

கரூர்

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' முடிவு செய்தது. அதன்படி இந்த தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குனரிடமும் ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' அமைப்பின் சோதனையை நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்தியது. இதனால் நேற்று கரூர் மாவட்ட மக்களின் செல்போன்கள் அவ்வப்போது ஒலிக்க தொடங்கியது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வு அடையாமல் இருந்த கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

திடீரென வெடிக்கும்...

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் பூங்கோதை:- நேற்று மதியம் 12 மணிக்கு மேல் நான் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது நான் வைத்திருந்த செல்போன் திடீரென அதிர்வுடன் கூடிய அதிவேக சத்தத்துடன் அலாரம் அடித்தது. நான் செல்போன் திடீரென வெடிக்கும் போல இருக்கிறது என்று நினைத்தேன். அப்போது அந்த அலறல் சத்தத்துடன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் நின்று விட்டது. மீண்டும் இதே போல் சற்று நேரத்தில் செல்போனில் அதிக சத்தத்துடன் அலாரம் வந்தது. நான் செய்வதறியாது இருந்தேன். சற்று நேரத்தில் நின்று போனது. இதுகுறித்து படித்த நபர்களிடம் கேட்டபோது இந்திய தொலைத்தொடர்புத்துறை மூலம் இது போன்ற எச்சரிக்கை அலறல் சத்தம் வந்துள்ளது என்றும், இது சோதனைக்கான எச்சரிக்கை மணி என்றும் தெரிவித்தனர். அதன் பின்னரே நான் நிம்மதி அடைந்தேன்.

அதிர்ந்து போனேன்

தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்:- நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் எனது சட்டை பாக்கெட்டில் செல்போன் வைத்திருந்தேன். அப்போது திடீரென அதிக அலறல் சத்தத்துடன் செல்போன் அதிரும்படி இருந்தது. சட்டைப் பாக்கெட்டுக்குள் அதிக ஒளிச்சத்தத்துடன் செல்போன் அலறியதால் சற்று அதிர்ந்து போனேன். மீண்டும் சிறிது நேரத்தில் அதிக சத்தத்துடன் அலாரம் வந்தது. அந்த ஒலி சத்தத்துடன் தமிழில் மெசேஜ் கிடைத்ததால் அதைப் படித்துப் பார்த்துவிட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொண்டேன். நிம்மதி அடைந்தேன். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் செல்போனில் இதுபோன்று வருவதால் அவர்களுக்கு பெரிய அச்சத்தை அது ஏற்படுத்தும். முன்கூட்டியே தகவல் தெரிவித்தாலும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் அதை அறிய மாட்டார்கள். எனவே கிராமப்புற பொதுமக்களுக்கு முன்கூட்டியே இது போன்ற அலாரம் சத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு வேண்டும்

முனிநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் டீக்கடை நடத்தி வரும் மருதாயி:- நான் டீக்கடை நடத்தி வருகிறேன். நேற்று மதியம் நான் கடையில் வைத்திருந்த செல்போனில் அதிரும் வகையில் அதிக அளவிலான சத்தம் வந்தது. நான் அருகில் இருந்தவர்களை அழைத்து செல்போன் இப்படி அலறுகிறது இதை பாருங்கள் என்று சொன்னேன். அவர்கள் பார்த்துவிட்டு செல்போன்களில் யாரும் கூப்பிடவில்லை. இது புது மாதிரியாக இருக்கிறது என்று கூறினார்கள். அப்போது சத்தம் நின்று விட்டது. சற்று நேரத்தில் மீண்டும் அதே போல் வேகமாக அலாரம் சத்தம் வந்தது. நான் மிகவும் அதிர்ந்து போனேன். ஏனென்றால் என்னிடம் இருப்பது ஒரே செல்போன் அது திடீரென வெடித்து சிதறி விட்டாலும் அல்லது பழுதாகி விட்டாலும் மீண்டும் பேசுவதற்கு செல்போன் இல்லாமல் போய்விடும். எனது டீ கடையில் வருமானமும் மிகவும் குறைவாக உள்ளது.

இந்த நேரத்தில் செல்போன் பழுதாகி விட்டால் நான் என்ன செய்வது என்று நினைத்து சோர்ந்து போனேன். மீண்டும் செல்போன் ஒலித்து சத்தம் நின்று விட்டது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து செல்போனில் ஒருவருக்கு போன் செய்து பார்த்தேன். ஆனால் செல்போன் ஒன்றும் ஆகவில்லை. நன்றாக இருந்தது. இதுபோன்று அதிகமாக சத்தத்தை எழுப்புவது, தேவையற்ற முறையில் கிராம புறத்தில் உள்ள அறியாத பொதுமக்களை இது அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே இது போன்ற மணி சத்தம் அலறும் போது முன்கூட்டியே பல்வேறு பகுதிகளில் இது போன்ற விழிப்புணர்வை எங்களைப் போன்ற கிராமப் பகுதி பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story