மழைநீரை நம்பி சம்பா சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்


மழைநீரை நம்பி சம்பா சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்
x

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் மழைநீரை நம்பி சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

கடைமடை பகுதி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை.அதே சமயம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 120 நாட்களை கடந்த நிலையில், முறை வைத்து வழங்கியதால் கடைமடையை தண்ணீர் வந்தடையவில்லை. இதனால் இந்த ஆண்டு சாகுபடி நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் விவசாயிகள் இருந்தனர்.

குளங்கள் வறண்டன

அதேசமயம் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், ரெட்டவயல், கொரட்டூர், ஊமத்தநாடு போன்ற பெரிய ஏரிகளும், 300-க்கும் மேற்பட்ட சிறு குளங்களும் நிரம்பாமல் வறண்ட நிலையிலேயே உள்ளது. இதனால் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறையதொடங்கியது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடைமடை யில் குறைந்து வந்த நீர்மட்டத்தை மழை காப்பாற்றிவிட்டது என கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சம்பா சாகுபடி பணியை தொடங்கினர்

சம்பா சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் கிடைப்பது சந்தேகம் என்று நினைத்த விவசாயிகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீரை பயன்படுத்தி சம்பா சாகுபடி பணியில் தொடங்கி உள்ளனர். பல்வேறு இடங்களில் நேரடி விதைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story