விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணியை தொடங்கினர்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணியை தொடங்கினர். மேலும் காப்பரிசி படையலிட்டு பூமா தேவியை வழிபட்டனர்.
நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி
வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும், ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும். உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாத நிலை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நல்வேறு பூட்டும் நிகழ்ச்சி தமிழ் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படுகிறது.
இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, பிலாவிடுதி, பட்டமாவிடுதி, மழையூர், ரெகுநாதபுரம், திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, வாண்டான்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது உழவு பணிக்கு பெரும்பாலும் டிராக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கிராம பகுதிகளில் பழமை மாறாமல் உழவு மாடுகளில் ஏர் பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர்.
காப்பரிசி படையல்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் ஒரு பொதுவான இடத்தில் ஊர்கூடி நல்லேறு பூட்டும் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். ஆனால் நவீன கருவிகளின் பயன்பாடு விவசாயத்தில் அதிகரித்துவிட்ட பின்பு தங்கள் நிலங்களிலேயே விவசாயிகள் நல்லேறு பூட்டும் நிகழ்வை நடத்துகின்றனர். முன்னதாக வயலில் ஏர் கலப்பை, நிறைகுடம் போன்றவற்றை வைத்து காப்பரிசி படையல் செய்து பூமாதேவியை வணங்கினர். இதேபோல் மாட்டு கொட்டகை முன்பு பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு மரியாதை செய்தனர்.
இதுகுறித்து வாண்டான்விடுதி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், பெரும்பாலும் டிராக்டர் மூலமே உழவு பணி நடந்தாலும் நாங்கள் நல்லேறு பூட்டும் நிகழ்வை மாடுகள், ஏர் கலப்பை கொண்டே நடத்துகிறோம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என எதிர்பார்த்து உள்ளோம் என தெரிவித்தனர்.
கீரமங்கலம்
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்பட பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் சித்திரை முதல் நாளில் தங்கள் வயல்களில் பூ, பழம், விதைகள் வைத்து படையலிட்டு விளை நிலத்திற்கும், ஏர் இழுக்கும் காளைகளுக்கும் தீபம் காட்டி முதல் ஏர் பூட்டி உழுதனர். இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களையும் ஏர் உழுக பழக்கினார்கள். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடை முடிந்த பிறகு சித்திரை முதல் நாளில் விளைச்சல் தரும் பூமிக்கும், மழை தரும் வானத்திற்கும் மண்ணை உழுது வளமாக்கும் காளைகளுக்கும் தீபம் காட்டி நல்லேர் பூட்டினால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறினர். அந்த மரபு மாறாமல் நல்லேர் பூட்டி வருகிறோம். விவசாயிகளிடம் மாடுகள் இல்லாமல் டிராக்டர் உள்ளதால் பல கிராமங்களில் விவசாயிகள் டிராக்டர் மூலம் நல்லேர் பூட்டியுள்ளனர் என்றனர்.
ஆலங்குடி, திருவரங்குளம்
ஆலங்குடி அருகே எஸ்.குளவாய்பட்டியில் உள்ள காடுவாரான் அய்யனார் கோவில் எதிரில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாதி, மத, இன பாகுபாடின்றி அனைவரும் ஒன்றுகூடி தேங்காய், பழங்கள், பச்சரிசி மற்றும் தானியங்களை வைத்து தெய்வங்களை வணங்கி 10-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகளைக் கொண்டு நல்லேர் பூட்டி வானத்தையும், விளை நிலத்தையும் வழிபட்டனர். மேலும் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய உபகரணங்களையும் வைத்து வழிபட்டு பெண்கள் கும்மியடித்து குலவையிட்டு எந்த ஒரு இயற்கை பேரிடரிலும் விவசாயிகள் மற்றும் விவசாயமும் பாதிக்கக்கூடாது, நாடு செழிக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும் என வேண்டினர்.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.குளவாய்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 33-வது ஆண்டாக நல்லேறு பூட்டும் நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வயல்வெளியில் நல்லேறு பூட்டினர்.