ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3,200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலை கண்ணிகைபேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம் உட்பட 21 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 276 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள் கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200-க்கும் மேற்பட்ட வீடுகள், 13 ஏரிகள், 3 குளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். ஆயினும் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை பருத்தி மேனிகுப்பத்தில் நேற்று மாலை 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. 6 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் திரளான விவசாயிகள் அங்கு திரண்டு சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யபாமா ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் சமரச பேச்சு நடத்தினர். அதிகாரிகளிடம் சாலை அமைக்கும் பணி உடனே நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். சாலை பணிகளை தடுத்து நிறுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், போராட்டம் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். அதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story