விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க நடப்பு சம்பா பருவம் 2023-2024-ல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் போரில் சம்பா நெல் பயிருக்கு நவம்பர் 15-ம் தேதிக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீடு தொகையாக ரூ.512 செலுத்த வேண்டும். நடப்பு பருவ அடங்கல், சிட்டா, உபயோகத்தில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயின் பெயர், முகவரி, பயிரின் பெயர், பயிரிட்டுள்ள நிலம் உள்ள கிராமம், வங்கி கணக்கு எண் மற்றும் பயிரிட்டுள்ள பரப்பு ஆகிய விவரங்களை சரியாக அளித்து பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.