நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி


நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி
x

மாயனூர் பகுதியில் நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

கரூர்

சம்பா பயிர் நடவு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர், மேலமாயனூர், கிழிஞ்சநத்தம், ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் அப்பகுதி வழியாக செல்லும் கும்பக்குழி வடிகால் வாய்க்காலை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாயனூர், கிழிஞ்சநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சில ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் படிப்படியாக தொடங்கியுள்ளனர்.

விவசாயிகள் குழப்பம்

இந்நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சம்பா நெற்பயிர்கள் நடவு செய்யும் பணியை மேற்கொண்டனர். பின்னர் நடவு செய்த பயிர்கள் கொஞ்சம், கொஞ்சமாக காயத்தொடங்கின. அப்போது தண்ணீர் பாய்ச்சியும் பயிர் ஏன் காய்கிறது என தெரியாமல் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் காய்ந்த பயிர்களுக்கு பதிலாக புதிதாக பயிர்களை வாங்கி மீண்டும் நடவு செய்தனர். மீண்டும் நடவு செய்த பயிர்கள் சில நாட்களில் காய தொடங்கின. இதுபோன்று 15 தினங்களுக்குள் விவசாயிகள் 3 முறை நடவு செய்து விட்டனர். எதனால் பயிர்கள் காய்கின்றன என தெரியாமல் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

குற்றம் சாட்டினர்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாய நிலங்களுக்கு கும்பக்குழி ஓடை வழியாக வரும் தண்ணீரில் கழிவுகள் கலந்து இருப்பதாகவும், இதனால் நெற்பயிர்கள் கருகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மேலும் தற்போது இந்த பகுதிகளில் கருகிய பயிர்களை அகற்றி 3-வது முறையாக சம்பா நாற்று பயிர்களை நட்டு வைத்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, பாசன தண்ணீரில் கழிவுகள் எதுவும் கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story