இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம்
நான்கு வழிச்சாலை பணிக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நான்கு வழிச்சாலை
பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 ஆயிரத்து 649 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கிடையில் பெரியாகவுண்டனூரில் சில விவசாயிகள் ஆவணங்கள் கொடுக்காததால், அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
தென்னை மரங்கள் அகற்றம்
இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நடத்தி ஒரு வார காலத்திற்குள் ஆவணங்களை கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு விவசாயிகள் ஆவணங்களை கொடுத்ததை தொடர்ந்து, தென்னை மரங்கள் மற்றும் வீடுகளை அகற்றி நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால், அதற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. மேலும் சாலை பணிகளும் நிறுத்தப்பட்டது.
போராட்டம்
இந்த நிலையில் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்து வந்த வருவாய்த்துறையினர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய திட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் இழப்பீடு பெற்று கொடுக்கப்படும் என்று கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.