விளை நிலங்களில் ஆடு, மாடுகளை கிடை போட விவசாயிகள் ஆர்வம்
இயற்கை உரத்துக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில் விளை நிலங்களில் ஆடு, மாடுகளை கிடை போட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மெலட்டூர்:
இயற்கை உரத்துக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில் விளை நிலங்களில் ஆடு, மாடுகளை கிடை போட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இயற்கை உரம்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்துக்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீபகாலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இயற்கை உரத்திற்காக கால்நடைகளின் கழிவுகளை சேகரித்து வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பு குறைந்தது
முந்தைய காலங்களில் கால்நடைகளின் கழிவுகளை வயல்களுக்கு இயற்கை உரமாக இட்டு அதிகளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காகவே விவசாயிகள் அதிகளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். சமீபகாலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் இயற்கை உரம் அதிகளவில் கிடைப்பதில்லை.
அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தானியங்களிலும் நச்சுத்தன்மை ஏற்பட்டு விடுகிறது.
மெலட்டூர்
இந்த நிலையில் இயற்கை உரத்துக்கான மவுசு தற்போது அதிகரித்து வருகிறது. இயற்கை உரத்துக்காக ஆத்தூர், அரியலூர், பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் வயல்களில் கிடை போடுவதற்காக தஞ்சை மாவட்டத்துக்கு அழைத்து வரப்படுகிறது. மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை, திருக்கருகாவூர், இடையிருப்பு அதனை சுற்றியுள்ள விளை நிலங்களில் கால்நடைகளை விவசாயிகள் கிடை போட்டு வருகிறார்கள்.
தரிசு நிலங்களில் பகலில் கால்நடைகள் மேய விடப்பட்டு, இரவு ேநரத்தில் பட்டியில் அடைத்து வைத்து உரங்களை சேகரிக்கின்றனர்.
செம்மறி ஆடுகள்
ராமநாதபுரம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்திற்காகவும் கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து மாடுமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் கூறியதாவது:-
தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் சம்பா அறுவடை முடிந்தவுடன் மாடுகளை மேய்ச்சலுக்காக விடுவோம். 6 மாதங்கள் வரை இங்கேயே தங்கி இருந்து மேய்ச்சலில் ஈடுபடுத்துவோம்.
பணம்- அரிசி
பகலில் மாடுகளை மேய்ப்போம். இரவு விவசாய வயல்களில் மாடுகளை தங்க (கிடை) வைப்போம். மாடுகளை ஒரு இரவுக்கு கிடை வைக்க ரூ.2 ஆயிரம் மற்றும் அரிசியை கூலியாக பெறுவோம். அதுபோல ஆடுகளுக்கு ஒரு நாள் இரவு கிடை வைக்க ரூ.300 முதல் ரூ.400 வரை வாங்குவோம்
மேட்டூர் அணை திறக்கப்பட்டு வாய்க்கால்களில் தண்ணீர் வந்து, வயல்களில் நடவு நட்டு முடியும் வரையிலும் இங்கேயே தங்கி இருந்து கிடை வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.