விவசாயி தீக்குளித்து தற்கொலை: காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை - ராமதாஸ்


விவசாயி தீக்குளித்து தற்கொலை: காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை - ராமதாஸ்
x

தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த உழவர் மோகன்ராஜ், தமது நிலத்தை பறிக்க அரசியல் கட்சி ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, அதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இளம் விவசாயி மோகன்ராஜ் அவரது தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளவாறு அவரது தற்கொலைக்கு காரணமான 23 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு சட்டப்படியான தண்டனையை பெற்றுத் தர வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story