பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை


பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

உடுமலை அருகே வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

உடுமலை அருகே வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சலிங்க அருவி

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

அருவிக்கு குருமலை, குலிப்பட்டி, மேல் குருமலை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் சாரல் மழையும் பலத்த மழையும் பெய்து வந்ததால் அருவியில் கடந்த சில மாதங்களாக நிலையான நீர் வரத்து இருந்து வருகிறது.

இதன் காரணமாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உற்சாகத்தோடு வந்து அருவியில் குளித்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அருவிக்கு செல்லும் பாதையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளையும் சாமி தரிசனம் செய்து பின்பு சுற்றுலா பயணிகள் திரும்பிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story