பிரபல தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் சீட்டு கேட்ட போலி சப்- இன்ஸ்பெக்டர் கைது
காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் சீட்டு கேட்ட போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்திற்கு நேற்று மதியம் சுமார் 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்று நான் சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவித் தொகையுடன் ஒரு சீட்டு தர வேண்டும் என்று கேட்டு வற்புறுத்தி உள்ளார். இதனையடுத்து கல்லூரி நிர்வாக ஊழியர் அவரிடம் உங்களது அடையாள அட்டை காண்பியுங்கள் என்று கேட்டுள்ளனர். உடனே அந்த வாலிபர் தனது கையில் வைத்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் என்று எழுதப்பட்டு இருந்த அடையாள அட்டை காண்பித்தார்.
அவர் காட்டிய அடையாள அட்டை போலியாக இருக்கலாம் என சந்தேகித்த ஊழியர் உடனே நிர்வாகத்திடம் கூறினார். இதுகுறித்த கல்லூரி நிர்வாகம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அப்துல் முகீத் (வயது 23) என்பதும், இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வி அடைந்தது தெரிய வந்தது.
மேலும் இவர் தனது உறவினர்களிடம் நான் சப்-இன்ஸ்பெக்டராக தேர்ச்சி பெற்று சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாக அனைவரிடம் கூறி வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டர் அணியும் உடைகளை அணிந்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று போலி சப்-இன்ஸ்பெக்டர் அடையாள அட்டை காண்பித்து தான் போலீஸ் என பொய் சொல்லி வந்தது விசாரணையில் தெரிந்தது.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறிய அப்துல் முகீத்தை கைது செய்தனர். மேலும் இவர் வேறு எங்கேயாவது கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் போலீசார் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.