போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் கைது


போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் கைது
x

போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறித்த ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் கைது செய்யப்பட்டார். அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததும் தெரிந்தது.

சென்னை

போலீஸ் என மிரட்டல்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர், சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் 27-ந்தேதி பெண் ஒருவரை அரும்பாக்கம் பகுதியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார். அப்போது அவரிடம் போலீஸ் என்று கூறி ஒருவர் 'கூகுள் பே' மூலம் ரூ.15 ஆயிரம் பெற்றார். பின்னர், மணிகண்டனிடம் அந்த நபர், விசாரணைக்கு அழைக்கும் போது போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்று கூறி சென்றார்.

அதன்படி, மணிகண்டனை அந்த நபர் 28-ந்தேதி அன்று செல்போனில் அழைத்து உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டருக்கு பணம் தரவேண்டும் என்று கூறி மீண்டும் அவரிடம் 'கூகுள் பே' மூலம் ரூ.65 ஆயிரம் பெற்றார். பின்னர் மணிகண்டனிடம் இதே பாணியில் ரூ.12 ஆயிரத்து 500 பணமும், அவர் அணிந்திருந்த 4 பவுன் மோதிரத்தையும் கடந்த 2-ந்தேதி பறித்துள்ளார். அந்த நபர் பணம் கேட்டு மணிகண்டனை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

பெண் போலீசின் மொபட் வாகனம்

இதனால் மணிகண்டன், இதுபற்றி சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரும்பாக்கம் லாட்ஜ் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் வந்திருந்த 'போலீஸ்' என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த மொபட் வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அந்த வாகனம் கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. பின்னர் அந்த பெண் போலீசிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், தன்னுடன் தங்கி இருக்கும் பாலாஜி (28) என்பவர்தான் அன்றைய தினம் எனது மொபட் வாகனத்தை ஓட்டி சென்றார் என்று கூறினார்.

சூதாட்டத்தில் இழந்தார்

இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். இவர், தியாகராயநகர் முத்துரங்கம் சாலை பகுதியை சேர்ந்தவர். எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி உள்ளார். திருமணமான சில மாதங்களிலேயே அவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் படிப்புக்கு ஏற்ற வேலை தனக்கு கிடைக்காததால் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும், மணிகண்டனை மிரட்டி பறித்த ரூ.92 ஆயிரத்து 500 பணத்தை 'ஆன்லைன்' சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், 4 கிராம் தங்க மோதிரத்தை அடகு வைத்து செலவு செய்து விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதே போன்று அவர், லாட்ஜூக்கு பெண்களை அழைத்து செல்லும் ஆண்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு பின்னர், பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story