உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்: செல்போன் கடை ஊழியர்கள் கடத்தல்; 6 பேர் கைது
திருவள்ளூர் அருகே செல்போன் கடை ஊழியர்களை கடத்தி வைத்து உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் ராஜாஜிபுரம் வரதராசனார் தெருவை சேர்ந்தவர் டில்லி கணேஷ் (வயது 25). இவர் மணவாளநகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது செல்போன் கடையில் ஊழியர்களாக முகம்மது இப்ராஹிம், சாந்தகுமார் ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சாவியை உரிமையாளரிடம் கொடுப்பதற்காக நடந்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் சாந்தகுமார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய 2 பேரையும் வழிமறித்து கடத்தி சென்று செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் கொண்டுவரச் சொல்லி மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதனால் பதறிப்போன கடை உரிமையாளர் டில்லி கணேஷ் உடனடியாக திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டருக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, கடை ஊழியர்களை கடத்தி வைத்திருந்த 6 பேரையும் மடக்கி கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (23), அன்சார் ஷெரிப் (23), உதயா (22), பிராங்க்ளின் (19), மற்றொரு ஆகாஷ் (19), மோகன் (26) ஆகிய 6 பேர் என தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.