ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகளுக்கு https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் 30.1.2023-ல் திறக்கப்பட்டது. 31.5.2023 வரை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, மாணாக்கர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக கல்லூரிகளுக்கான இணையதளம் கடந்த 16-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.