பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி: சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க அணிகலன் கண்டெடுப்பு


பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியில் தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டவையாகும்.

புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டை

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான தொல்லியல் அடையாள சான்றுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணி கடந்த மே மாதம் 20-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைநிலை உணர்திறன் முறையான கண்டறிதல் மற்றும் வரம்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளால் 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 8 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. அகழாய்வு தொடங்கிய சில நாட்களிலேயே ஒரு குழியில் செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது.

தங்க அணிகலன் கண்டெடுப்பு

பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியில் இதுவரை வட்டச்சில்லுகள் 49-ம், கென்டி மூக்குகள் 2-ம், கண்ணாடி வளையல்கள் 4-ம், கண்ணாடி மணிகள் 95-ம், சுடுமண் விளக்கு 1-ம், தக்களிகள் 2-ம், காசு 1-ம், சூதுபவள மணி 1-ம், மெருகேற்றும் கற்கள் 2-ம் என 159 தொல்பொருட்களும், கீறல் குறியீடு 2-ம் கிடைத்துள்ளன. மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை ஓடுகள், கருப்புநிற பானை ஓடுகள், கருப்பு-சிவப்பு நிற பானை ஓடுகள், கூரை ஓடுகள், துளையிடப்பட்ட பானை ஓடுகள் 2 என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் நேற்று 3 முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் ஒரு குழியில் 133 செ.மீ. ஆழத்தில் 6 இதழ் கொண்ட தங்க அணிகலன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது மூக்குத்தியா அல்லது தோடா என்பது பற்றி தெரியவில்லை. இதன் எடை 0.26 கிராம் ஆகும்.

சங்க கால வரலாறு

இதேபோல மற்றொரு குழியில் எலும்பு முனை கருவி மற்றும் வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய சூதுபவள மணி ஒன்றும் கிடைத்துள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் தங்கதுரை கூறியதாவது:- பொற்பனைக்கோட்டையில் முதன் முதலாக தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருபுறமும் உள்ள இந்த நகையானது காதில் அல்லது மூக்கில் அணிய பயன்படுத்தப்பட்டதா? என்பது பற்றி தெரியவில்லை. இதுபற்றி ஆராயப்படுகிறது. மற்றொரு பொருளான எலும்பு முனை கருவி என்பது விலங்கின் எலும்பினால் செய்யப்பட்டது. இது நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கற்களாலான இந்த சூதுபவள மணியானது குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது.

இந்த சூதுபவள மணியானது சங்க கால வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட தங்க நகை சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story