எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை காலிகுடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை காலிகுடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
எட்டயபுரம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி பஞ்சாயத்து ரணசூர்நாயக்கன்பட்டி கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் தாசில்தார் மல்லிகாவிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ரணசூர்நாயக்கன்பட்டியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் ரணசூர்நாயக்கன்பட்டி, அருகிலுள்ள இளம்புவனம் கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட சில கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் பிரச்சினை
இந்த நிலையில் இளம்புவனம் பஞ்சாயத்து தலைவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரணசூர்நாயக்கன்பட்டிக்கு வந்தார். தங்கள் கிராமத்திற்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறியவாறு, ரணசூர்நாயக்கன்பட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாயை அத்துமீறி அடைத்து விட்டு சென்றார். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கிராமத்திலிருந்து குடிநீரை எடுத்துக் கொண்டு, எங்கள் கிராம மக்களுக்கு குடிநீர் தர மறுப்பது எந்தவகையில் நியாயம். இதனால் கடந்த 20 நாட்களாக குடிநீர் இல்லாமல் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் கிராமத்திற்கு உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டு இருந்தனர்.
தாசில்தார் நடவடிக்கை
இந்த மனுமீது தாசில்தார் உடனடி நடவடிக்கை எடுத்ததன் மூலம், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது மற்றும் போலீசார் ரணசூர் நாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்று, குடிநீர் திட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டனர். இதை தொடர்ந்து அந்த கிராம மக்களும், பா.ஜ.க.வினரும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.