வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்


வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்
x
தேனி

ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் முன்னிலை வகித்து பேசினார்.

கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, தேனி மாவட்ட வர்த்தகர் சங்க கே.எஸ்.கே.நடேசன் பேசும்போது, "தேனி மாவட்டத்தில் பருத்தி உற்பத்தி பரப்பளவு வெகுவாக குறைந்து விட்டது. பருத்தி விளைச்சலை பெருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகளில் தயாரிக்கும் துணிகளுக்கு சாயமேற்ற ஈரோடு பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் சாயமேற்றும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். திராட்சை, வாழை போன்ற விளை பொருட்களை இருப்பு வைத்து ஏற்றுமதி செய்ய தேவையான குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க வேண்டும்" என்றார்.

மதிப்புக்கூட்டும் பொருட்கள்

தேனி சிப்கோ தலைவர் சீனிவாசன் பேசும்போது, "தேனி மாவட்டத்தில் அதிக அளவில் வாழை சாகுபடி நடக்கிறது. வாழையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாம். தென்னை சர்க்கரை, நீரா பானம், மா, திராட்சை பழக்கூழ் தயாரித்தல் போன்ற வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்" என்றார்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள் சிலரும் வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, "மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏற்றுமதி பொருட்கள் மூலம் சுமார் ரூ.1,500 கோடிக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். அதற்கு தேவையான உதவிகள் அரசு வழிகாட்டுதல்களுடன் செய்யப்படும்" என்றார்.

இதில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இணை இயக்குனர் ஸ்ரீதர், குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குனர் ஜெகதீஸ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story