ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுமுகமாக நடைபெற்றது - தலைமை தேர்தல் அதிகாரி
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் சுமுகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
கண்காணிப்பு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருந்து வெப்காஸ்டிங் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நடக்கும் வாக்குப்பதிவை காணொலி மூலம் கண்காணித்தார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
வாக்குப்பதிவு சதவீதம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சுமுகமாக நடைபெற்றது. தேர்தல் நடவடிக்கைகள் குறித்து வந்த புகார்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியின் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதமும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீதமும், மாலை 6 மணி நிலவரப்படி 74.69 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த பொதுத்தேர்தலில் அந்தத் தொகுதியில் 66.77 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
பாதுகாப்பு
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட 5 கம்பெனி துணை ராணுவத்தில், ஓட்டுப்பதிவு முடிந்ததும் 3 கம்பெனி துணை ராணுவம் திரும்பிச் சென்றுவிடும். மீதமுள்ள 2 கம்பெனி துணை ராணுவம், ஓட்டு எண்ணிக்கை முடிவடையும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.