மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி - தமிழக அரசு உத்தரவு
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் நீண்ட நாட்களாக கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எல்&டி கட்டுமான நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 14-ந்தேதி கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. இதனிடையே கட்டுமானம் மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கடந்த 2-ந்தேதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்ப்பித்தது. இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என மே 10-ந்தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது.