தொழில்முனைவோர்கள் கருப்பு பட்டை அணிந்து கலெக்டரிடம் மனு


தொழில்முனைவோர்கள் கருப்பு பட்டை அணிந்து கலெக்டரிடம் மனு
x

தொழில்முனைவோர்கள் கருப்பு பட்டை அணிந்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

திருச்சி

கருப்பு பட்டை அணிந்து...

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதில் திருச்சி வர்த்தக மைய தலைவர் கனகசபாபதி, குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர் சங்க (டிடிசியா) தலைவர் ராஜப்பா ஆகியோர் தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்தினர், அலுமினியம் உற்பத்தியாளர்கள், கிரில் தயாரிப்பாளர்கள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், பாலிதீன் உற்பத்தியாளர்கள் என்று 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பழைய கட்டண முறை

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பில் சுமார் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொதுவான கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சரிடம் பரிந்துரைக்க கேட்டுக்கொள்கிறோம். அதன்படி, சிறு தொழிற்சாலைகளுக்கு ஒரே பிரிவில் பழைய கட்டணமான ரூ.35-க்கு மாற்றி அமைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். பீக் ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேற்கூரை மற்றும் சோலாா் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மல்டிஇயர் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்வதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மின்சாரம் மற்றும் இதர கட்டணங்களை உயர்த்தக்கூடாது.

ரத்து செய்ய வேண்டும்

தற்போது பயன்படுத்தக்கூடிய வெல்டிங் எந்திரங்கள் மூலமாக பவர்பேக்டரில் எந்தவித குறைவும் ஏற்படுவது கிடையாது என்பதால் சர்சார்ஜ் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி, இதை நம்பி உள்ள தொழில்முனைவோரையும், தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story