மியான்மரில் சிக்கி தவிக்கும் என்ஜினீயர்களை உடனே மீட்க வேண்டும் - ராமதாஸ்


மியான்மரில் சிக்கி தவிக்கும் என்ஜினீயர்களை உடனே மீட்க வேண்டும் -  ராமதாஸ்
x

மியான்மருக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 300 என்ஜினீயர்களையும் மத்திய அரசு மீட்க வேண்டும் என கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த சுமார் 300 பொறியாளர்கள் மியான்மர் நாட்டின் மியாவாடி காட்டுப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு சட்டவிரோத சைபர் குற்றங்களை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

தாய்லாந்தில் வேலை வழங்குவதாக அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், அங்கிருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோத சைபர் குற்றங்களை செய்ய மறுப்பவர்கள் அடி-உதை, உடலில் மின்சாரம் பாய்ச்சுதல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒரு குற்றமும் செய்யாத, படித்த படிப்புக்கு வேலை தேடியதற்காக அந்த இளைஞர்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. அவர்களை மீட்க வெளியுறவுத் துறை முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை முழுமையாக வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

மியான்மருக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 300 பொறியாளர்களையும் மத்திய அரசு மீட்க வேண்டும். தாய்லாந்தில் வேலை வழங்குவதாகக் கூறி அவர்களை ஏமாற்றிய மோசடி நிறுவனங்கள் மீதும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Next Story