ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி - கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயர் கைது


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி - கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயர் கைது
x

மேற்கு மாம்பலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை அடைக்க பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

போரூர்:

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 58). இவர் தனது மகளுடன் கடந்த 5-ந் தேதி காலை சென்னை வந்தார். பின்னர் இருவரும் மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் சென்றனர்.

ஆட்டோவில் இருந்து இறங்கி கிரி தெரு வழியாக மண்டபம் நோக்கி அவர்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தமிழ்ச்செல்வி அணிந்திருந்த தாலி செயினை பறித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வி கூச்சலிட்டபடியே மகளின் உதவியுடன் அந்த வாலிபரை தடுத்து மடக்கி பிடித்தார். இதையடுத்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து அசோக் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது கே.கே நகர் பகுதியை சேர்ந்த சிவில் என்ஜினீயர் சரவணன் (வயது 24) என்பது தெரியவந்தது.

நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் சரவணன் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். மேலும் நண்பர்கள் சிலரிடம் ரூ.5 லட்சம் வரை கடனாக வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தால் விரக்தி அடைந்த சரவணன், வேறு வழியில்லாமல் செயின் பறிப்பில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story