அமலாக்கத்துறை வழக்கு: செந்தில்பாலாஜி மனு மீது நாளை தீர்ப்பு


அமலாக்கத்துறை வழக்கு: செந்தில்பாலாஜி மனு மீது நாளை தீர்ப்பு
x

கோப்புப்படம் 

அமலாக்கத்துறை வழக்கில் செந்தில்பாலாஜி மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சென்னை செசன்ஸ் கோர்ட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை இதே கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்த மனு மீதான முடிவு வரும்வரை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை முன்வைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, இந்த மனு மீது 12-ந்தேதி (நாளை) தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு கைது செய்தது. அவரது ஜாமீன் மனுவை கடந்த பிப்ரவரி 28-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதற்கு பதில் அளிக்குமாறு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூடுதல் அவகாசம் கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வக்கீல் முகுல் ரோதகி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், விசாரணையை 12-ந் தேதிக்கு (நாளை) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story